மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது- ஜீவன்
In ஆசிரியர் தெரிவு December 11, 2020 8:55 am GMT 0 Comments 1659 by : Yuganthini
மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் தொடர்பிலும் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலை, வட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
எனவே கிடைக்கும் என நம்புகின்றோம். தற்போதைய சூழ்நிலையால்தான் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது என்றாலும், பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் ரூபாயை விட அதிக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
அப்படியானால் இந்த கூட்டுஒப்பந்த முறையில் புதிய வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறித்த முறையில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். அது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேலும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக வெளியில் பேசுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு பேசுவது கம்பனிகளுக்கே சாதகமாக அமைகின்றன.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் நிச்சயம் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கியும் உள்ளோம்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழங்கப்பட்டும் உள்ளன.
மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரியில்தான் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். அறைகுறையாக உள்ள வீடுகளை புனரமைப்பதற்கும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மலையக பல்கலைக்கழகத்துக்கான இடம், கொட்டகலை பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கல்லூரி ஒன்றும் அமைக்கப்படும். விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் பற்றி தீர்மானிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.