மலையக மக்களுக்காய் இளைஞர்கள் புரட்சி!
In சிறப்புக் கட்டுரைகள் October 24, 2018 6:46 am GMT 0 Comments 4812 by : Varshini
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, இளைஞர்கள் இம்முறை வீதிக்கு இறங்கியுள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் அம்மக்களின் சம்பளம் எட்டாக்கனியாக்கப்பட்டு வந்த நிலையில், அம்மக்களுக்காய் குரல்கொடுக்க கொழும்பு காலி முகத்திடலில் இன்று (புதன்கிழமை) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தலைநகரின் பல பகுதிகளிலிருந்து இன்று காலை பேரணியாக வந்த இளைஞர்கள், காலி முகத்திடலில் கூடி மலையக மக்களுக்காய் உரிமை குரல் எழுப்பி வருகின்றனர்.
இனம், மதம், மொழி பேதமின்றி முற்றுமுழுதாய் இளைஞர்களால் ‘ஒக்டோபர் 24’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் இம்முறையும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. 15 வீத சம்பள அதிகரிப்பை மாத்திரமே வழங்க முடியுமென கடந்த பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிராக மலையகம் எங்கும் நாளாந்தம் போராட்டங்களும் ஹர்த்தாலும் வலுப்பெற்று வருகின்றன.
ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் சொற்ப அளவான சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு நழுவிச் செல்வதே வழக்கமாக உள்ளது.
உலக சந்தையில் காணப்படும் தேயிலை விலை வீழ்ச்சி, பராமரிப்பு என்பவற்றை காரணம் காட்டும் முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய முடியாதென கூறிவருவதும், பின் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் அதில் கைச்சாத்திடுவதுமாக கடந்த கால செயற்பாடுகள் காணப்பட்டன.
இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது வழமை. அந்தவகையில் குறித்த ஒப்பந்தம் கடந்த 14ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஊடகங்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை.
வழமைபோன்று இம்முறையும் முதலாளிமார் சம்மேளனத்தின் முடிவுக்கு இணங்கி தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை வெளிப்படை. இந்நிலையில், மலையகத்தில் பரவலாக இம்முறை ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, ஹர்த்தால் என மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொழிலாளர்களின் நலன்சார்ந்த விடயங்களை உரிய தரப்பிற்கு கொண்டுசென்று, அவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் தரப்பே தொழிற்சங்கங்கள். ஆனால், அச்செயற்பாடு நடைமுறையில் இடம்பெறுகின்றதா?
சரி, தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை நோக்கினால், அடிப்படை வசதிகளையேனும் பூர்த்திசெய்ய முடியாத வகையில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரதான உணவாக இன்றும் தேங்காய் அற்ற மா ரொட்டியாக அமைந்துள்ளமை பலருக்கு தெரிந்த விடயம். அம்மக்கள் மாதமொன்றிற்கே 4,000 தொடக்கம் 10,000 வரையான சம்பளத்தையே பெறுகின்றனர். நிர்வாகம் கேட்கும் தேயிலை கொழுந்தின் அளவில் குறைவு ஏற்பட்டால் நாட்சம்பளத்தில் வெட்டு விழும். தொழிற்சங்கங்களுக்கான சந்தாப்பணமோ எவ்வித இடையூறும் இன்றி செல்கின்றது. எல்லாம் கழிய மிகுதியாக இருக்கும் சொற்ப சம்பளத் தொகையில் அம்மக்களின் ஒருமாத கால வாழ்க்கையை கொண்டுநடத்துவது எவ்வாறு அமையுமென்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
தேயிலை மலைக்கு தொழிலுக்குச் செல்லும் மக்களின் பாதுகாப்பு பற்றி சிந்தித்தால், அட்டைக்கடி, சிறுத்தை தாக்குதல், குளவிக்கொட்டு என அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் எண்ணிலடங்காதவை. மழை, வெயில் என இயற்கையின் சீற்றம் எவ்வாறு அமைந்தாலும் அவர்கள் தொழிலுக்குச் செல்வது கட்டாயம். இயற்கையின் சீற்றத்தால் தொழிலுக்குச் செல்லாவிட்டால், அதற்கான கொடுப்பனவுகள் கிடையாது. அன்றைய நாளுக்கான சம்பளம் கழிக்கப்பட்டே வழங்கப்படும்.
அண்மையில் இவ்வாறு அடை மழையில் தொழிலுக்குச் சென்ற தாயொருவர் மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். மலையகத்தில் இது புதிதல்ல. இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி மலையகத்தில் பதிவாகின்றன.
அம்மக்களின் குடியிருப்புகளும் அவ்வாறே. சுத்தமான நீர், சுகாதாரமாக சூழல் என சகல விடயங்களும் அம்மக்களுக்கு வெகுதூரத்தில் உள்ளன. இதனால், கல்வியில் பின்னடைவு, சுகாதார சீர்கேடு என எதிர்கால சந்ததியும் பாதிக்கப்படும் அபாயத்தை இன்றைய மலையக சமுதாயம் எதிர்நோக்கியுள்ளது.
கல்வியறிவு இல்லாத காரணத்தால் ஏமாற்றப்பட்ட, உரிமைகள் பறிக்கப்பட்ட மலையக சமுதாயத்திற்காக, இன்று இளைஞர் சமுதாயம் கைகொடுத்துள்ளது.
இனம், மதம், மொழி கடந்து நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள இளைஞர்கள் கரம்கோர்த்து சுயாதீனமாக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம் மலையக மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வழிசமைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளால் முடியாத கட்டத்திலேயே இளைஞர் படை திரண்டுள்ளது. அதற்கும் அரசியல் சாயம் பூசி அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பை சிதைக்க கடந்த நாட்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மக்களின் நியாயமான, அடிப்படையான எதிர்பார்ப்பு கிடைத்தாக வேண்டும் என்பதே இலக்கு. அந்த இலக்கை அடைய வழியமைப்பதே காலத்தின் தேவை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.