வடக்கு மாகாணத்தை ஆட்டிப்படைத்த மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவில் சுமார் 10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி வாழும் முல்லைத்தீவு மக்களின், இரு காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.
விவசாயத்தை பிரதானமாக நம்பி வாழும் மக்களின் நிலை, அடுத்த விளைச்சலுக்கான அத்திவாரமின்றி காணப்படுகிறது.
மழை வெள்ளத்தினால் முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 ஆயிரத்து 679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒலுமடு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், துணுக்காய் பாண்டியன்குளம், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, குமுழமுனை ஆகிய கமக்கார அமைப்பின் கீழ் 8531 வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் நட்டஈடு வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டு, அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென இம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
கடன்களை வாங்கி தமது விவசாயத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கும் இம்மக்கள், தற்போது விளைச்சலை இழந்து வாழ்வாதாரம் குன்றிப்போயுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆகவே தமது நிலைகுறித்து உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும், அதுவே அடுத்த வேளாண்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.