மஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன
In இலங்கை December 5, 2020 8:40 am GMT 0 Comments 1976 by : Jeyachandran Vithushan

மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒரு கைதி ஜா-எல பகுதியையும் மற்றவர் வத்தளை பகுதியையும் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒன்பது கைதிகளின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹர சிறைச் சாலையில் இடம்பெற்ற கலவரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின 20 அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.
குறிப்பாக சிறைக் கலவரத்திற்கு வழிவகுத்த முக்கிய காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக அஜித் ரோஹண கூறினார்.
இதேவேளை கலவரத்திற்கு முன்னர் சிறைச்சாலையின் சில கைதிகள் உட்கொண்ட மருந்துகள் குறித்து விசாரிக்க மருத்துவ நிபுணர்களின் உதவியையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.