மஹர சிறைச்சாலை மோதல் – இதுவரையில் 255 அறிக்கைகள் பதிவு
In இலங்கை December 13, 2020 4:53 am GMT 0 Comments 1471 by : Dhackshala

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இதுவரை 255 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக நேற்றைய தினம் மேலும் 27 அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் 11 அறிக்கைகள் சிறை அதிகாரிகளிடமும் 16 அறிக்கைகள் கைதிகளிடமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
நவம்பர் 29 முதல் இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 255 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு இதுவரை இரண்டு கைதிகள் மீது பிரேத பரிசோதனை நடத்தியும் உள்ளது.
கலவரத்தைத் தூண்டியவர்களை அடையாளம் காண குற்றவியல் விசாரணைத் துறை இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாகக் கொண்டு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 104 பேர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களுள் காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.