மஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்!

மஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 71 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மஹர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, களேபரம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றங்களால் பிணையளிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ள 78 கைதிகள் அட்டாளச்சேனையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைப் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண உறுதி செய்ததுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 187 கைதிகள் கொழும்பு சிறைச்சாலையின் விஷேட வேறுபடுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மஹர சிறைச்சாலையின் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் 200 பேரும் சாதாரண பொலிஸார் 400 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸாரோ அதிரடிப் படையினரோ சிறைச்சாலைக்குள் செல்லவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.