மஹிந்த அணியினரின் கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

மஹிந்த அணியினரின் கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் நளின் பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாது என்று விமர்சித்தார்கள். தற்போது இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையை மையப்படுத்தி தற்போது இரண்டு தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரசாங்கத்தினால் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் பயனற்றதாகவும், மாறுபட்ட விளைவுகளையும், பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் மாத்திரம் காணப்பட்டது.
ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஓமான் அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாக குறிப்பிட்டு இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ரீதியான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இதனையும் எதிர்தரப்பினர் அரசியல் மயப்படுத்தி விட்டார்கள்.
ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கின்ற இரண்டு அபிவிருத்திகளும் முழுமையடைந்தால் 6000 தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும்.
தற்போதைய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. சவால்களுக்கு மத்தியில் இவ்விரு அபிவிருத்திகளும் நிறைவு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.