ராஜபக்ஷ குடும்பம் ஆட்சிக்கு வர எதனையும் செய்யத் தயங்காது – சுஜீவ சேனசிங்க
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் பதவிக்கு வர எதனையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் பதவிக்கு வர பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் எதனையும் செய்வார்கள். குண்டு வீசவும், மிளகாய்த் தூள் வீசவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.
ஆனால் அடுத்த தேர்தலில் எமது பக்கத்தில் மிகச் சிறந்த தலைவர்களை களமிறக்குவோம். இன்று பொதுஜன பெரமுன கட்சியில் உள்ளவர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அந்தக் கட்சியிலுள்ள பலரிடம் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய கொடுமையான ஆட்சி வந்துவிடுமொ என்ற அச்சம் காணப்படுகிறது.
அதனால், நல்லாட்சியைத் தொடர்ந்தும் முன்னோக்கி நடத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல எதிர்பார்க்கின்றோம்.
இன்று, குடும்பம் ஒன்றின் மாதாந்த வருமானம் நூற்றுக்கு முப்பதாக அதிகரித்துள்ளது.
ஊழல் மோசடிகளைப் பொறுத்தவரையில், யாரையேனும் குற்றஞ்சுமத்தி உடனே சிறையில் அடைத்துவிட முடியாது. அதற்காக சட்டம் ஒழுங்கு நடைமுறை இருக்கிறது. தற்போது, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.