மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதாக UAE அரசாங்கம் உறுதி!
In இலங்கை April 7, 2019 9:02 am GMT 0 Comments 2788 by : Jeyachandran Vithushan

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு, வௌிவிவகார அமைச்சினூடாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாடு கடத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இது குறித்த வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய வௌிவிவகார அமைச்சர் அன்வார் பின் மொஹமட் கர்காஷ் ஆகியோருக்கு இடையில் அபுதாவியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதன்போது மாகந்துரே மதூஷ் மீதான குற்றவியல் வழக்கு இலங்கையில் இருப்பதாகவும் எனவே அவரை நாடுகடந்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்க்கு அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகந்துரே மதூஷுன் மீது 10 கொலைகள், 3 கொலை முயற்சி, 3 திருட்டு குற்றச்சாட்டு ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு குற்றச்சாட்டுக்கள் மற்றும் 18 கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை நீதிமன்றங்களினால் 4 பிடியாணை உத்தரவு, சிவப்பு எச்சரிக்கை இன்டர்போல் உத்தரவு என்பன பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் மதூஷுன் மீது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படாவிடின், டுபாய்க்கு சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
டுபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்கு, அது குறித்து நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழு, நேற்று முன்தினம் கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.