மாகாணசபைத் தேர்தல் உரிமை இல்லாமல் போனதற்கு கூட்டமைப்பே பொறுப்பு- காமினி லொகுகே
In இலங்கை January 12, 2021 4:16 am GMT 0 Comments 1302 by : Yuganthini
மாகாணசபைத் தேர்தல் உரிமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து இல்லாமல் போனதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் காமினி லொகுகே மேலும் கூறியுள்ளதாவது, “இனப்பிரச்சினை என்று கூறிக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
மாகாணசபைத் தேர்தல் உரிமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து இல்லாமல் போனதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துமாறு ஆரம்ப காலத்தில் இருந்து பலதரப்பினரால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் மாறுப்பட்ட பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் பிரித்து வழங்கினால் அங்கு சுயாட்சி தன்மையே நிலவும்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல எந்த மாகாணங்களுக்கும் ஒருபோதும் பிரித்து வழங்கப்படமாட்டாது.
இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விதிவிலக்கல்ல. ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. 2009ஆம் ஆண்டுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணசபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபை முறைமையில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன.
அவை திருத்தப்பட்டு மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும். எந்த இன மக்களின் உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது.
பொது சட்டத்திற்கு அனைத்து இன மக்களும் கட்டுப்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெறாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.