மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு மஹிந்த அணியே காரணம் – கிரியெல்ல
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிரணியினரே பிரதான காரணம் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் இருந்தே பழைய தேர்தல் முறைமையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்தது.
ஆனால், எதிரணியினர் தான் புதிய முறைமையின் கீழ் இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.
புதிய முறைமையில் தேர்தலை நடத்தும் நடவடிக்கையானது பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளது. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதானாலும், சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதுதான் தேர்தல் தாமதத்துக்கான காரணமாகும். எதிரணியினர் புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியமையாலேயே இதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில்தான் உறுதியாக இருக்கிறது. மாகாணசபை காலாவதியாகியுள்ளமையால், எமது உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களும், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு முடிவினை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.