மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல்
In ஆசிரியர் தெரிவு December 11, 2020 10:02 am GMT 0 Comments 1615 by : Yuganthini

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல், விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் குறித்து ஆராயுமாறும் பிரதமர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
அதன்காரணமாக இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர், புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதிலளித்த பிரதமர், ஏற்கனவே அது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஜீ.புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.