மாநிலத்தில் நமது ஆட்சி: மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி நிச்சயம் – ஸ்டாலின்

மாநிலத்தில் நமது ஆட்சி, மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி நிச்சயம் அமையுமென என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “25 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகேட்டு வந்துள்ளோம்.
அங்கு மக்கள் வழங்கிய ஆதரவும், ஆரவாரம் மிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன. அந்த நம்பிக்கை, முழுமையான வெற்றியாகப் பழுத்துப் பலன் தரும் என்ற எதிர்பார்ப்புடன் நான் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது.
நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டு ஆட்சிகளையும் விரட்டிட வேண்டுமென்றால் தங்கள் வாக்குகளை சிதறவிடாமல் தி.மு.க. கூட்டணிக்கு அளித்தால் தான் நல்லதொரு ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் அமையும்.
5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி, 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி, அதிலும் குறிப்பாக இந்த 2 ஆண்டு கால அடிமை ஆட்சி இவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக தி.மு.க. கூட்டணி மட்டுமே இருக்கிறது. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல என்பது மக்களுக்குத் தெரியும்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் நம்பிக்கையை, மக்களின் எதிர்காலத்தை, நாட்டின் வளர்ச்சியை, மாநிலத்தின் உரிமையை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும். அதற்கு உத்தரவாதமாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது” என்று ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.