மாவீரர் தின தடைக்கு அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்- இரா.சாணக்கியன்
In இலங்கை December 1, 2020 9:07 am GMT 0 Comments 1613 by : Yuganthini
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.
மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவுகூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடைசெய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம்ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம்.
ஆனால் இன்று மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களையே சேரும்.
அதாவது, ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.