மீண்டும் சோதனை நடவடிக்கையில் வடகொரியா! – பேச்சுவார்த்தை பாதிக்குமா?
சக்திமிக்க ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை படைத்த வழிகாட்டுதல் ஆயுதமொன்றை வடகொரியா சோதனை செய்துள்ளது.
இது அணுவாயுத வகையா என்பது தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. ஆனால், வழிகாட்டுதல் ஆயுதமென வடகொரிய செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக சக்திவாய்ந்த ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவற்றை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டதென நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தோடு, பல்வேறு நிலைகளிலிருந்து தாக்குதல் நடத்தும் வகையில் இந்த ஆயுதம் உள்ளதென்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஹனோயில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் வடகொரியா மேற்கொண்ட முதலாவது ஆயுத சோதனை நடவடிக்கை இதுவாகும்.
கடந்த பேச்சுவார்த்தை எவ்வித சாதக முடிவுகளையும் எட்டாத நிலையில், அமெரிக்கா சிறந்த அணுகுமுறையுடன் வந்தாலே அடுத்தகட்ட பேச்சுவாரத்தை நடக்குமென வடகொரிய தலைவர் கிம் கடந்தவாரம் அறிவித்திருந்தார். ஆனால், வடகொரியாவுடனான உறவு சிறந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், அடுத்த சந்திப்பிற்கு பச்சைக்கொடியும் காட்டியிருந்தார். இந்நிலையில், வடகொரியா தற்போது வழிகாட்டுதல் ஆயுதமொன்றை சோதித்துள்ளது.
எனினும், இந்த சோதனை நடவடிக்கையானது வடகொரியாவின் அணுவாயுத சோதனை நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை மீறவில்லையென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத சோதனையை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை இடம்பெறும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை ஏற்படலாமென ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். வடகொரியா, ஆயுத சோதனையை தொடர்ச்சியாக மேற்கொள்வதை கைவிடாது என்பதை இந்த சோதனை நடவடிக்கை நினைவூட்டுவதாக உள்ளதென்றும் குறிப்பிடுகின்றனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு எதிராக வடகொரியா மீது ஐ.நா. ஏற்கனவே தடைவிதித்துள்ளது. எனினும், குறுந்தூரம் சென்று தாக்கும் வகையில் இந்த ஆயுதம் அமைந்துள்ளதால் ஐ.நா. வின் தடை இதில் தாக்கம் செலுத்தாதென குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இந்த ஆயுத சோதனை நடவடிக்கையானது, அணுவாயுத தடை குறித்த பேச்சுவார்த்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தாதென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.