முக்கிய ஆயுதக் கொள்வனவு: பெரும் பலம்பெறும் இந்தியக் கடற்படை!

போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 450 கிலோமீற்றர் வரை சென்று இலக்கைத் தாக்கும் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
இந்திய மதிப்பில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பெறுமதியான இந்த ஆயுதக் கொள்வனவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய ஆயுதமாகக் கருதப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பல, ஏற்கனவே இந்தியக் கடற்படை போர்க் கப்பல்களில் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடற்படைக்காக விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுவரும் போர்க் கப்பல்களில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 களின் பிற்பகுதியில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த எவுகணைகள் முப்படைகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக விளங்குகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.