முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு!

அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான, பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடருக்காக தற்போது ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சில அணிகள், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னர் முன்னோட்ட தொடர்களில் விளையாடுகின்றது.
இதற்கமைய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கிடையில் இத்தொடரில் விளையாடும் பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் முழுமையான விபரத்தை தற்போது பார்க்கலாம்,
இந்த அணியில், கிட்டத் தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அஹமட் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அவர் இறுதியாக 2017ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
அதன்பிறகு, பங்களாதேஷ் பீரிமியர் லீக் ரி-20 தொடரில் விளையாடிய அவர், கணுக்கால் காயத்திற்கு உள்ளானார். அதன்பிறகு அவர் எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை.
இந்த நிலையில் தற்போது இத்தொடரில் இடம்பெற்றுள்ளார். அவர் உலகக்கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெறாத நிலையில், எதிர்வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் அணியில் மேலதிக வீராக சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.
24 வயதான டஸ்கின் அஹமட், இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, 32 வயதான பந்து வீச்சு சகலதுறை வீரரான பர்ஹட் ரீஸா, அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சுமார் 8 வருடங்களுக்கு பிறகு பங்களாதேஷ் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள பர்ஹட் ரீஸா, கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
அவர் இதுவரை, 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 412 ஓட்டங்களையும், 22 விக்கெட்டுகளையுமு; வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
மஷ்ரபீ மோர்டாசா தலைமையிலான அணியில், டமீம் இக்பால், லிடொன் தாஸ், சௌமியா சர்கார், முஷ்பிகுர் ரஹீம், மொஹமதுல்லா, சகிப் ஹல் ஹசன், மொஹமட் மிதுன், சபீர் ரஹ்மான், மொசெடெக் ஹூசைன், சய்ப்புதீன், மொயிடி ஹசன், ரூபெல் ஹொசைன், முஷ்டபிசுர் ரஹ்மான், அபுஜெயிட், நயீம் ஹசன், யாசிர் அலி, டஸ்கின் அஹமட், பர்ஹட் ரீஸா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும், முத்தரப்பு ஒருநாள் தொடர், மே மாதம் 5ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் அயர்லாந்தில் உள்ள குளோன்டர்ப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.