அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் – சுமந்திரன்
In ஆசிரியர் தெரிவு May 2, 2019 5:32 pm GMT 0 Comments 3032 by : Litharsan

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சவாலுக்குட்படுத்த நீதிமன்றத்தை விரைவில் நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவசரகால சட்டம் நடைமுறை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் குறிப்பிடுகையில், “அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, எவருமே அதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வழமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் கூட அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நாட்டில் நடைபெற்ற சூழ்நிலை காரணமாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
ஆனால், அவசரகால விதிமுறைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளைப் பார்த்த போது, அவை மிக மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மக்களின் சுதந்திரங்கள் இலகுவாகப் பறிக்கக் கூடியதாகவும், மக்களுக்கு எதிராக அடக்குமுறையை உபயோகிக்க இலகுவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விதிகள் தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது. அந்த விதிகளை மாற்ற வேண்டும்.
இதேவேளை,முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றதொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்காகவே புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதி கொலைகளை செய்வதற்கும் துணிந்துவிட்டதாக சுமந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “இராணுவ புலனாய்வுப் பிரிவில் ஒரு பிரிவு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனை வெறும் வதந்தியாக மட்டும் அவர்கள் பரப்பவில்லை. அந்த வதந்தியை மக்கள் நம்பப் செய்வதற்காக கொலைகளைக் கூட செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வவுணதீவு சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.
அது ஒரு சம்பவம். அதனைப் போலவே என்னைக் கொல்வதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டமும் அப்படியானதாக இருந்திருக்கலாம். ஏனெனில் உயிர் அவர்களுக்கு முக்கியமல்ல. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் நம்பவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
அதற்காக அவர்கள் பலரை உபயோகிக்கிறார்கள். முன்னாள் போராளிகளாக இருந்தாலும் கூட எங்கள் எல்லாருக்கும் தெரிந்தவகையிலே அவர்களில் சிலர் புலனாய்வோடு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இரகசியம். அது போலத்தான் இந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.