முப்படையினரை பலவீனப்படுத்தாமல் பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு April 5, 2019 2:48 am GMT 0 Comments 2408 by : Dhackshala
முப்படையினரை பலவீனப்படுத்தாமல் பலப்படுத்தும் நடவடிக்கையையே தாம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) விவாதிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடற்படை, விமானப்படையின் தொழில்நுட்ப மற்றும் பொறியியலாளர் பிரிவுகளுக்கான அதிகாரிகளை இணைப்பதன் ஊடாக அந்நிய செலவாணி நாட்டிற்கு கிடைக்கும் எனவும் பயிற்சி வழங்கி அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும்போது, அதன் ஊடாக பாரிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலிஸாரை விமர்சிப்பதும் அவமதிப்பதும் தகுந்தது அல்லவென குறிப்பிட்ட ஜனாதிபதி, 12 மணித்தியாலங்கள் உணவின்றிக்கூட பணியாற்றும் அவர்களின் சேவையை தரமானதாக மாற்றுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கட்டுப்படுத்துவதற்கான பல சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததென்றும் மூன்று மாதங்களுக்குள் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், புதிய சட்டங்களைத் தயாரிப்பதற்கான பொறுப்பை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களம் முற்றாக மாற்றமடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.