முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதியை வேண்டிய பயணம் தொடரவேண்டும்
In சிறப்புக் கட்டுரைகள் May 18, 2018 4:20 am GMT 0 Comments 4100 by : Arun Arokianathan
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் மனித நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன.
2004ம் ஆண்டில் இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள ஆசிய நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் காவுகொண்ட சுனாமி எப்படி எமது துயர் மிகு நினைவுகளில் ஒருபகுதியாகிவிட்டதோ அதேபோன்று முள்ளிவாய்க்கால் என்பதும் இனிவரும் காலமெல்லாம் எமது நினைவுகளில் நீங்காதிருக்கும்.
முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது இலங்கை வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில் ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் தமிழர்கள் தொடக்கம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரையிலான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் 40 ஆயிரம் பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரையில் விரிவான விசாரணைகள் நடத்தப்படாமை இந்த நாட்டில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இந்த முள்ளிவாய்க்கால் மீளா துயரினை நினைவில்கொள்ளாதவர்கள் யாரும் இல்லை! இதை எண்ணி பெருந்துயர் அடையாதவர்கள் யாரும் இல்லை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இறந்தவர்களை நினைவுகூறுவதோடு மட்டும் நின்றுவிட முடியாது. வாழ்வதாரம் இழந்து தவிக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும். இந்த நாள் துக்க தினமாக மட்டும் அல்லாமல், மக்கள் ஒன்று கூடும் நாளாக இருக்க வேண்டும். மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும்.
பௌத்த பேரினவாதத்திற்கு அடிபணிந்துகிடக்கின்ற அன்றேல் பௌத்த பேரினவாதத்தை காண்பித்தே தனது தவறுகளை மறைத்துக்கொள்ள முற்படுகின்ற இலங்கை அரசாங்கங்களிடமிருந்து படுகொலைக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.
சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும். அரசியல் தீர்விற்காக அரசாங்கத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் படுகொலைகளுக்கான நீதியை நிலைநாட்டவேண்டும். பொறுப்புக்கூறல் இல்லையென்றால் உண்மையான நல்லிணக்கம் சாத்தியப்படாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.