முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது – ரத்தன தேரருக்கு நீதி அமைச்சர் பதில்
In ஆசிரியர் தெரிவு February 12, 2021 6:40 am GMT 0 Comments 1606 by : Dhackshala

முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது என்றும் ஒரு சட்டம் அல்லது கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஏனைய மதங்கள் பின்பற்றும் சட்டங்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்த நிலையில், அத்துரலிய ரத்தன தேரர் எழுப்பிய கேள்விக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் கண்டியன் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், யாழ்ப்பாணம் தேசவழமைச் சட்டம், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் போன்ற பல தனியார் மத சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
அவ்வாறு இருக்கும்போது, ஒரே ஒரு மதச் சட்டத்தை மட்டுமே அகற்ற முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், கலந்துரையாடல்களுக்குப் பிறகு அதைத் திருத்த முடியும். அல்லது இலங்கையில் உள்ள அனைத்து தனியார் மதச் சட்டங்களும் ஒன்றாக ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவர்களின் ஒப்புதலுடன் அவ்வாறு செய்யப்படுகிறார்கள் என தெரிவித்த அமைச்சர், அதே நேரத்தில் அவர்களின் தந்தையர்கள் அவர்கள் சார்பாக குழந்தையின் சம்மதத்தை உறுதி செய்த பின்னரே திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள இந்த நடைமுறையில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட கட்சிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இதைச் செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கண்டியன் சட்டத்தின்படி திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 16 என்றும், அதேபோல முஸ்லிம் சட்டத்தில் குழந்தையின் சம்மதத்துடன் 12 வயதுக்கு மேல் திருமணம் செய்ய முடியும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இது தொடர்பாக முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக திருத்தி 2002ல் சவுதி அரேபியாவில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு, முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக திருத்துவதற்கு 2020 நவம்பரில் அமைச்சரவை முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் நீதி அமைச்சர் கூறினார்.
குழந்தை தனது சொந்த திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிக்க பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அமைச்சர் சப்ரி, இது தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தில் திருத்தம் செய்ய முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
முஸ்லிம் சட்டம் எதிர்காலத்தில் தேவைக்கேற்ப திருத்தப்படும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் உறுதியளித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.