முஸ்லீம்களின் சடலங்கள் மாலைதீவில் புதைக்கும் செயற்பாடு வெட்கக்கேடான விடயமாகும்- செந்தில்வேல்
In இலங்கை December 21, 2020 3:09 am GMT 0 Comments 1357 by : Yuganthini

முஸ்லிம் மக்களின் சடலங்களை மாலைதீவில் கொண்டு சென்று புதைப்பதற்கு பேச்சுவார்த்தை செய்வதாக கூறுவது வெட்கக்கேடானது என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொவிட் 19 தொற்றினால் இறந்த தமது சொந்த நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம் மக்களின் சடலங்களை அவர்களது விருப்பப்படி புதைப்பதற்கு மறுத்துவரும் அரசாங்கம், மாலைதீவில் கொண்டு சென்று புதைப்பதற்கு பேச்சுவார்த்தை செய்வதாக கூறுவது வெட்கக்கேடானதும் அவமானகரமானதுமாகும்.
இத்தகைய நிலைப்பாடானது, முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தொடரும் பேரினவாத ஒடுக்குமுறையின் நீடிப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
ஒரு நாட்டின் அடிப்படை உரிமைகள் அனைத்து குடிமக்களுக்கும் உரியனவாகும். அவற்றைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தினது கடமையாகும்.
அந்த வகையில் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மத, பண்பாட்டு அடிப்படையில் புதைப்பதற்கு மறுப்புத் தெரிவித்து, எரியூட்டி வருவது கண்டனத்துக்குரியதாகும்.
உலக சுகாதார அமையம், கொவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என அறிவித்துள்ளது. அதனடிப்படையில் உலக நாடுகளில் சடலங்கள் புதைக்கப்பட்டும் வருகின்றன.
ஆனால் கோட்டாபய- மஹிந்த ஆட்சியானது பேரினவாத ஒடுக்குமுறை நிலை நின்று, முஸ்லிம் மக்கள் மீதான வன்மத்தை பழிவாங்கலாக முன்னெடுத்து வருவதையே உணர முடிகிறது.
இத்தகைய கட்டாய எரியூட்டலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை இதற்கு எதிராக முஸ்லிம் மக்களும் முற்போக்கு அமைப்புக்களும் முன்னெடுத்துவரும் வெள்ளைத் துணிப் போராட்டத்தையும் அமைதிவழி ஆர்ப்பாட்டங்களையும் எமது கட்சி ஆதரிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.