மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
In இந்தியா February 6, 2021 9:40 am GMT 0 Comments 1395 by : Yuganthini

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளார்.
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
அந்தவகையில் நாளை, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அசாமில் நாளை காலை இரண்டு, வைத்தியசாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாநில நெடுஞ்சாலைகளில் முக்கிய மாவட்டசாலைகளை மேம்படுத்துவதற்கான அசாம் மாலா என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து மாலையில் மேற்குவங்க மாநிலம் ஹால்டிமாவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு பிரதமர், அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல் பாரத் பெற்றோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் அமைத்துள்ள எல்.பி.ஜி. இறக்குமதி முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 1100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு எல்.பி.ஜி.யை கையாளும் திறன் கொண்டதாகும்.
பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி-துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 2400 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஹால்டியா, ரானிசாக்கில் நான்கு வழித்தடம் கொண்ட ரயில்வே மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தையும் தொடங்கி வைக்கிறார். இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்காள ஆளுநர்,முதல்வர், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மத்திய அமைச்சர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.