மேல் மாகாணத்தை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – பொலிஸார்
In இலங்கை January 13, 2021 8:48 am GMT 0 Comments 1569 by : Dhackshala

மேல் மாகாணத்தை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கொழும்பு, வடக்கு மற்றும் மத்தியக் கொழும்பு பகுதிகளில் நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் அந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றுமாறு அறிவுருத்தப்பட்டிருந்தது.
இந்த விதிமுறைகளை அப்பகுதி மக்கள் உரியமுறையில் பின்பற்றுகின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.
சுகாதார சட்டவிதிகளுக்கு புறம்பாக ஒன்றுகூடி கலந்துரையாடல்களில் ஈடுபடல், உணவு உட்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால், அந்த பகுதிகளில் மீண்டும் கொவிட்-19 வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது.
அதனால் அப்பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தி வைக்கவேண்டிய நிலைமை ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.