மைத்திரியின் ஊடாக கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்- பிள்ளையான்
In இலங்கை January 27, 2021 4:32 am GMT 0 Comments 1497 by : Yuganthini
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்களென ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள், அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம்.
இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள்.
அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக் காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார்.
நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.