மொன்டே கார்லோ டென்னிஸ் – கிண்ணத்தை கைப்பற்றினார் பாபியோ போக்னினி
In டெனிஸ் April 22, 2019 7:08 am GMT 0 Comments 1924 by : Jeyachandran Vithushan

மொன்டே கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் செர்பியா வீரர் டூசான் லஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினார்.
டென்னிஸ் உலகில் நூற்றாண்டுகள் பழமையான மொன்டே கார்லோ டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
ஆண்களுக்கே உரித்தான இத்தொடர், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்ட தொடராகவும் பார்க்கப்படுகின்றது.
செம் மண் தரையில் நடைபெறும் இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, ஆண்கள் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர் நேற்றுவரை நடைபெற்றது.
இந்த நிலையில் இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செர்பியா வீரர் டூசான் லஜோவிச் மற்றும் இத்தாலி வீரர் பாபியோ போக்னினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.
இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த இப்போட்டியில ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாடிய பாபியோ போக்னினி 6-3 என கைப்பற்றினார்.
இதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாவது செட்டில் டூசான் லஜோவிச் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், எவ்வித நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் அந்த செட்டையும் 6-4 என கைப்பற்றி பாபியோ போக்னினி வெற்றிபெற்றார்.
ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கிண்ணத்தை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.