மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது சமாதானம், நல்லிணக்கத்திற்கு தடையாகவுள்ளது – ஜனாதிபதி
In இலங்கை April 7, 2019 4:19 pm GMT 0 Comments 2211 by : Jeyachandran Vithushan
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக அமைந்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக மக்கள் பிளவுபடுவதை தடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி புனித அல்குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தமை நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாரிய பங்களிப்பினை ஆற்றும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மொழியை அடிப்படையாக்கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவுசெய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு தனது எண்ணக்கருவிற்கமைய பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட மும்மொழி தேசிய பாடசாலை வேலைத்திட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்துவது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.