மோதலைத் தவிருங்கள் – சூடான் தலைவர்களிடம் பாப்பரசர் உருக்கமான வேண்டுகோள்
உலக சமாதானத்திற்காக மோதலைத் தவிர்க்குமாறு தென் சூடான் ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வத்திக்கானில் தன்னை சந்தித்த தென் சூடான் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் கால்களில் விழுந்து பாப்பரசர் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வத்திகானுக்கு விஜயம் செய்துள்ள தென் சூடான் ஜனாதிபதி சல்வாக்கீர் மற்றும் கிளர்சிக்குழு தலைவரும், முன்னாள் உப ஜனாதிபதியுமான ரேக் பக்சார் உள்ளிட்டவர்கள் பரிசுத்த பாப்பரசரை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துள்ளனர்.
இதன்போது உலக சமாதானத்திற்காக மோதலைத் தவிர்க்குமாறு இரு தலைவர்களையும் பாப்பரசர் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த பாப்பரசர், எதிர்பாராத விதமாக இரு சூடான் தலைவர்களின் கால்களிலும் விழுந்து தனது வேண்டுகோளை முன்வைத்தார்.
இது மிக உருக்கமான தருணமாக அமைந்ததாகவும், வருகைதந்த அதிகாரிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாப்பரசரின் இந்த உருக்கமான கோரிக்கையை ஏற்ற தென் சூடான் அதிகாரிகள் விரைவாக ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதாக உறுதியளித்தனர்.
தென் சூடானில் கடந்த 5 வருடங்களாக நிலவிய உள்நாட்டுப் போரில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.