யதார்த்தத்தைப் புறந்தள்ளும் அரசியல்வாதிகளின் அளவுகடந்த ஆசைகள் !
In சிறப்புக் கட்டுரைகள் October 12, 2018 2:19 am GMT 0 Comments 4430 by : Arun Arokianathan
அரசியல் வாதிகளின் ஆசைகளுக்கு வரையறைகிடையாது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் ஆசைகள் நாட்டின் உயர்ந்த சட்டமாக கருதப்படும் அரசியல்சாசனத்திலுள்ள வரையறைகளைக் கூட கண்டுகொள்ளத்தவறுவது கவலைக்கிடமானது.
2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல்யாப்பின் 19வது திருத்தத்தில் இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே பதவிவகிக்க முடியும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும் சட்ட மேதைகளாக கருதப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாக போட்டியிட இடமுள்ளது என்று கருத்துக்களை வெளியிட்டமை ஆசை கண்களை மறைக்கும் என்ற நியதிக்கு சிறந்த உதாரணமாக கொள்ளமுடியும்.
சட்டம் தெரியாத பாமரர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தினால் அதனை உணர்வுவெளிப்பாடு என ஒதுக்கிவிடமுடியும். ஆனால் சட்டத்தை நன்கறிந்தவர்களே அப்படிக்கூறுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமன்றி தவறாக வழிகாட்டும் செயற்பாடாக கொள்ளப்படவேண்டும்.
மஹிந்த மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும் என்ற கருத்துக்களை அவரது ஆதரவாளர்கள் கட்சிக்காரர்கள் தெரிவித்து அவை அடங்கிப்போன நிலையில் தற்போது இடைக்கால அரசாங்கம் ஒன்றை மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடாமல் எப்படியேனும் வேட்பாளராக வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கின்ற தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் ஜனாதிபதியாகும் தனது கனவிற்கு வழிகோலும் வகையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ஆதரவளித்த பொதுஜன பெரமுண கட்சி அமோக வெற்றியீட்டியதையடுத்து ஏப்ரல் மாதத்தில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை மீண்டுமாக நியமிப்பதென்றால் மீண்டுமாக ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவேண்டும். அதில் வெற்றிபெறத்தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தம்மிடம் உள்ளதா என்பதை பொது எதிரணி சிந்திக்கின்றதா அன்றேல் நாட்டிலுள்ள அரசியல்சாசனத்திற்கு புறம்பாக வேறுவழிகளை சிந்திக்கின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.
மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் எஞ்சியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டிப் பார்த்தால் கூட மொத்தம் 94 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர் என்ற யதார்த்தத்தைக் கூட புரியாதுள்ளனரா?
ஆசைகள் தலைக்குமேல் ஏறினால் அடிப்படைகள் கூட மறந்துபோய்விடுகின்றன அரசியல் வாதிகளுக்கு என்பதை இவர்களின் நிலை எடுத்தியம்புகின்றது.
2015ம் ஆண்டு ஜனவரி 8ம்திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தையடுத்து பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்திருந்ததைப் போன்று தற்போது மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்க முடியும் என்பது பொது எதிரணி தரப்பினரது வாதமாக உள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக தெட்டத்தெளிவாக ஜனாதிபதி சிறிசேன குறிப்பிட்டிருந்த நிலையிலேயே ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தார். அப்படியிருக்க பொதுஎதிரணியினரோ எப்படியேனும் பதவிக்கு வந்துவிடவேண்டும் என்ற முனைப்பில் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். மீண்டுமாக ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற மைத்திரிபால சிறிசேனவின் அவாவை தமது அதிகாரக்கனவிற்காக பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர். 2015ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்றபோது மீண்டுமாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்திருந்த மைத்திரிபால சிறிசேன தமக்கிருக்கும் பல தசாப்த அரசியல் பட்டறிவின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.
அதனைவிடுத்து பேராசையின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க முற்பட்டால் அது பெரும் அபகீர்த்திக்கு வித்திடக்கூடும். மஹிந்த ராஜபக்ஸ அதிகாரங்களின் உச்சியில் இருந்துகொண்டு சர்வாதிகாரிக்குரிய வல்லமையோடு மூன்றாம் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது கிடைக்காத வெற்றி தமக்கு கிடைக்குமா என்பதை மைத்திரிபால சிறிசேன உணர்ந்துகொள்ளவேண்டும்.
தற்போதைய நிலையில் அவருக்கு முன்பாக உள்ள சிறந்த தெரிவு 2015ல் அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவதேயாகும்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.