யாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு
In இலங்கை April 16, 2019 6:25 am GMT 0 Comments 2295 by : Dhackshala

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதிக் கூட்டம் இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 04.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலத்தில் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் புதிய பதவிவழி உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்யும் பொதுக்குழுக் கூட்டம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கீரிமலை சிவபூமி மண்டபத்தில் இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் செயலாளர் அடங்கிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மாதர் முன்னணி மாநாடு 27ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து வாலிபர் முன்னணியின் மாநாடு அன்றைய தினம் 05.00 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெறுமென்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கிளைகளினதும் உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இறுதியாக கட்சியின் பகிரங்க பொதுக் கூட்டம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.30 மணிக்கு நல்லூரில் சங்கிலியன் தோப்பு மைதானத்தில் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.