யாழில் குடும்ப தலைவனுக்கு ஏற்பட்ட விபரீதத்தினால் அவலநிலைக்கு தள்ளப்பட்ட அபிராமி குடும்பம்
In இலங்கை February 17, 2021 8:23 am GMT 0 Comments 1467 by : Yuganthini
யாழ்ப்பாணம்- மட்டுவில் கிழக்கில் வசிக்கும் இமாணுவேல் அபிராமியின் குடும்பம், அவரின் குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்ட விபரீதத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றது.
குறித்த குடும்பத்தினை வழிநடத்தி வந்த அதன் தலைவர் 6 மாதங்களுக்கு முன்னர், கூலி வேலைக்காக சென்றிருந்துள்ளார். இதன்போது ஏற்பட்ட விபத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு படுகையிலேயே இருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை 24 மணி நேரமும் பராமரிப்பதற்கு ஒருவர் கட்டாயம் அருகிலேயே இருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், மேலும் தொழிலுக்கும் செல்லமுடியாமல் 4 வயது குழந்தையுடன் ஒழுங்காக உண்பதற்கு கூட வழியின்றி துன்பப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவியான அபிராமி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அபிராமி மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் மட்டுவில், சந்திரபுரம், சாவக்கச்சேரி ஜே.315 பிரிவில் வசித்து வருகின்றோம்.
எனது கணவன் கூலி வேலையின்போது 4ஆம் மாடியில் இருந்து தவறுதலாக கீழே விழுந்தமையினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, படுகையிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை பராமரிப்பதற்கு ஏற்ற வருமானம் எங்களுக்கு கிடையாது. எனது 4 வயது குழந்தையின் செலவுகளை கூட என்னால் தற்போது பார்க்க முடியாமல் இருக்கின்றது.
மேலும் 24 மணிநேரமும் அவருடன் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கின்றது. மூன்று நேரம் சாப்பாட்டுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றோம்.
இந்நிலையில் உதவிகள் சில கிடைத்தாலும் தொடர்ந்து அவைகள் கிடைப்பதில்லை. வீடும் கூட திருத்த வேண்டிய நிலைமையில்தான் காணப்படுகின்றது.
இதேவேளை அரசாங்கத்தினாலும் எந்ததொரு உதவிகளும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. கிராம சேவகரின் ஊடாக கூட எந்ததொரு உதவியும் கிடைக்கவில்லை.
ஆகவே அரச சார்பற்ற அல்லது உதவக் கூடியவர்கள் எங்களது நிலைமையை உணர்ந்து உதவுவதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என கண்ணீருடன் அபிராமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.