யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டதாக ஒருவர் கைது – இருவருக்கு வலைவீச்சு

யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நாவற்குழியைச் சேர்ந்த சந்தேகநபரே இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பிரதான வீதி மட்டத்தடியில் உள்ள சட்டத்தரணி பி.மோகனதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த முதலாம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
சட்டத்தரணியின் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுத் தப்பித்தது.
இச்சம்பவம் குறித்து சட்டத்தரணியால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகளை யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரத்னவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்பினர் முன்னெடுத்தனர்.
அத்துடன், சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தேடப்படுகின்றனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.