யாழில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீள குடியமர்த்த அமைச்சரவை அங்கீகாரம்
In இலங்கை February 2, 2021 7:52 am GMT 0 Comments 1386 by : Dhackshala

யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியில்லாத மக்களை துரிதமாக மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு 7 இலட்சம் ரூபாய் செலவில் தலா 20 பேர்ச் காணியை வழங்க ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்களது பிறப்பிடத்தை அண்மித்த பகுதியில் காணிகளை வழங்குமாறு இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போதைய பெறுமதிக்கு அமைய குறித்த பிரதேசத்தில் 7 இலட்சம் ரூபாய்க்கு 20 பேர்ச் காணியை கொள்வனவு செய்ய முடியாதென்பது தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட அதே தொகைக்கு அரச விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு அமைய 10 தொடக்கம் 20 பேர்ச்சஸ் வரையிலான காணியை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.