யாழில் நான்கு கடைகளுக்குப் பூட்டு- 32 பேர் சுயதனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கிக் கட்டடத்துக்கு வளிச்சீராக்கி (AC) பொருத்துவதற்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நகரில் நான்கு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் 32 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கிக் கட்டடத்துக்கு வளிச்சீராக்கி பொருத்துவதற்கு கடந்த மாதம் வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் வைத்து பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்ததில், அவர் யாழ்ப்பாணம் நாக விகாரை விடுதியில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன், வங்கிக் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன், தொழிலாளிகள் சிலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர் சென்றதாகத் தெரிவித்த நாக விகாரைக்கு அண்மையில் உள்ள மருந்தகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர் சென்றிருந்த வேம்படிச் சந்தியில் உள்ள உணவகம், வைத்தியசாலை வீதியில் உள்ள ஐஸ்கிறீம் கடையுடன் கூடிய உணவகம் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு, மூடப்பட்ட நிறுவனங்களில் உள்ளவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தால் திறக்க அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.