யாழில் போராட்டத்தின் பின் வீடு திரும்பியவர் திடீர் மரணம்
In இலங்கை April 8, 2019 4:41 am GMT 0 Comments 2923 by : Yuganthini
யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்து சமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணம், மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய ஒருவர், தனது வீட்டில் நீராடிவிட்டு பின்னர் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.