யாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு தீவிரம்
In இலங்கை April 25, 2019 7:31 am GMT 0 Comments 2535 by : Dhackshala
யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது கோயிலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் சிறிது நேரத்தில் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இராணுவத்தைக்கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளை கையளித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப்பொதியினை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
இந்த சோதணை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு, இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.