யாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு
In இலங்கை December 3, 2020 2:39 am GMT 0 Comments 1679 by : Yuganthini

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும் பலத்த காற்றுடனான கனமழையினால் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன.
அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் நேற்றைய தினம் பலத்த காற்றுடனான கனமழை பெய்தது. இதனால் 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை,தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், மாவட்டத்தில் 15வீடுகள் முழு அளவிலும் 153வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளதாகவும் இதுவரை 5இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்றைய தினமும் கடும் காற்றுடனான கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளமையினால் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.