யாழில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – அரசாங்க அதிபர்
In இலங்கை December 31, 2020 5:49 am GMT 0 Comments 1554 by : Dhackshala
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் இதுரையான காலப்பகுதியில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 26 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு தொடர்ச்சியாக 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதிகள் இரண்டு தடவைகளில் அந்தந்த பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஊடாக குறித்த நிதியினை பெற்று அதற்குரிய வேலைத்திட்டத்திளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையில் தொற்று மேலும் பரவாது இருப்பதற்கு மக்களின் அவதானமான செயற்பாடு மிகவும் முக்கியமானது என்பதோடு, மக்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.