யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
In இலங்கை January 10, 2021 8:28 am GMT 0 Comments 2338 by : Yuganthini

வடக்கு- கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, ‘இறந்தோர் நினைவுச் சின்னம்’ இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்க வேண்டுமென நாம் கருதுகின்றோம்.
இந்தப் பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர்.
அன்றைய இரவில் பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக எமது அங்கத்தவர்கள் எவராவது, மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் நாம் மக்களிடம் மன்னிப்பு கோரவும் கடமைப்பட்டுள்ளோம்.
பல்கலைக்கழகமானது சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நாம் சமூகத்தை புறந்தள்ளி மமதையுடன் செயற்பட முடியாது.
இது தொடர்பில் நாளை (திங்கட்கிழமை) வடக்கு- கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம்.
எனினும் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளிலும் அதனுடன் இணைந்த கடமைகளிலும் ஈடுபடும் ஊழியர்களை பரீட்சைகள் இடம்பெறுமாயின் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகின்றோம்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.