யாழ். பல்கலை மாணவர் குழு மோதல்- விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளிப்பு!
In இலங்கை November 13, 2020 5:43 am GMT 0 Comments 1401 by : Vithushagan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே கடந்த மாதம் இடம்பெற்ற குழு மோதல் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக தனிநபர் ஆயத்தினால் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையே துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனி நபர் விசாரணை ஆயத்தின் தலைவர் ஓய்வு நிலைப் பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தினால் இந்த விரிவான விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் தீவிரமாக ஆராயப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணை அதிகாரியினால் முன் மொழியப்பட்டுள்ள சிபார்சுகளின் அடிப்படையில் பல்கலைக் கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு பரிந்துரை முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.