யாழ். மாநகர சபையை இழந்தாலும் முடிவுகள் ஆராய்ந்தே எடுக்கப்படும்- மாவை

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையின் தீர்மானங்களை ஆராய்ந்தே முடிவு எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராசா இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபையில் எங்கள் வேட்பாளர் வெற்றிபெற முடியாத நிலையில் மணிவண்ணன் தெரிவாகியுள்ளார்.
இதனூடாக புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுவது. என்பது தொடர்பாக ஆராய்ந்திருக்கிறோம்.
குறிப்பாக நாங்கள் எதிரணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை. இதன்படி, வரவுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அதனை ஆதரிப்பதா, எதிர்ப்பதா எனத் தீர்மானம் எடுப்போம்.
அதேபோல், ஏனைய சந்தர்ப்பங்களில் அந்தந்தப் பிரேரணையின் நன்மை, தீமையை ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.
ஆகையால், இனிவரும் காலங்களில் சபையின் விடயங்களில் சபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையோடு கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து அதற்கமைய செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.