யாழ். மாநகர சபை முதல்வர் – ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் என மாவை சேனாதிராஜா அறிவிப்பு
In இலங்கை December 29, 2020 7:49 am GMT 0 Comments 1488 by : Dhackshala
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் மாநகர சபை முதல்வர் தனது பதவியை இழந்துள்ளார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஜானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளை காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.