யேமனில் அவசரகாலநிலை பிரகடனம்!
யேமனில் அதிகரித்துச்செல்லும் கொலராநோயைத் தொடர்ந்து, அங்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஹவுதி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவை மையமாகக் கொண்டியங்கும் சுகாதார அமைச்சு இதனை பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தீவிரமாக பரவியுள்ளது.
யேமன் பொது சுகாதார அமைச்சின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) புள்ளிவிபரங்களின்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 327 பேர் கொலரா நோயினால் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 160,000 பேர் கொலரா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களில் நாடெங்கும் 29 அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் தலைநகர் சனாவில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணித்தியாலங்கள் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன.
கொலராவால் பீடிக்கப்பட்டவர்களில் 30 வீதமானோர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
யேமனில் கடந்த நான்கு வருட காலமாக தொடரும் உள்நாட்டுப் போர் நோய்த்தொற்றுக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுகாதாரத்தில் 55 வீதம் எதிர்மறை தாக்கத்தை விளைவித்துள்ளது. அதுமாத்திரன்றி நீர், காணி மற்றும் உணவுத்தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றமும் நோய்த்தொற்றுக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் யேமனை உலுக்கும் கொலரா நோயினால் இதுவரை 3070 பேர் உயிரிழந்துள்ளனர். 1.5 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வரலாற்றில் கொலரா நோய் மோசமாக தாக்கிய சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.