ரஜினியை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவிப்பு
In இந்தியா December 30, 2020 3:25 am GMT 0 Comments 1534 by : Varothayan

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை நாளை (31) அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில், ‘கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை’ என்பதை நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய தரப்புக்களுக்கும் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்கள் சிலர், ரஜினியின் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ‘வா தலைவா’ என அரசியலுக்கு அழைக்கும் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தி.மு.க.வில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கைப் பண்புகள் பாழடைந்து விட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றது தான் குற்றம்’ எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.