ரஞ்சனை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்து சட்ட ஆலோசனையை பெறவேண்டும் – சபாநாயகர்
In இலங்கை January 19, 2021 8:34 am GMT 0 Comments 1373 by : Jeyachandran Vithushan
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்து சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சிறைத்தண்டனைப் பெற்றும் எவ்வாறு தற்போது நாடாளுமன்றுக்கு வருகிறார் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. உரிய சட்ட ஆலோசனைக்கு அமைவாகவே அவர் நாடாளுமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். உடனடியாக அவர் நாடாளுமன்றுக்கு வரவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பாக இன்றுதான் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாம் சட்ட ஆலோசனையை பெறவேண்டியுள்ளது. எனவே, எனக்கு சிறிது காலம் தருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கிடையில் எந்தவொரு நபருக்கோ அல்லது கட்சிக்கோ கருத்துக்களை முன்வைக்க வேண்டுமாக இருந்தால், எழுத்து மூலமாக அதனை சமர்ப்பிக்குமாறும் நான் கேட்டு கொள்கிறேன்.
மூன்று வாரக் காலத்திற்குள் இதற்கான முடிவை நான் அறிவிக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.