லவ் ஜிகாதிற்கு எதிராக புதிய சட்டம் : மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!
In இந்தியா November 18, 2020 9:29 am GMT 0 Comments 1421 by : Krushnamoorthy Dushanthini

கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது.
ஒரு பெண்ணை காதலித்து அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து மணம் புரிவது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. மதம் மாறாத பெண்களை கொலை செய்வது, ‘ஆசிட்’ வீசுவது போன்ற கொடூர சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசு புதிய சட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளது.
இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா , விரைவில் லவ் ஜிகாத் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த சட்டத்தின்படி ஒருவரை திட்டமிட்டு காதலித்து பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் அந்த திருமணம் செல்லாது எனவும் அறிவித்துள்ளார்.
அவ்வாறு திருமணம் செய்தால் பினையில் வரமுடியாத வகையில், ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இத்தகைய மோசடி திருமணத்திற்கு உதவியாக இருந்தவரும் கைது செய்யப்படுவார். புதிய சட்டத்தின்படி வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதாக இருந்தால் அது குறித்து ஒரு மாதத்திற்கு முன் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.