லிபியாவில் உக்கிரமடையும் போர்: தலைநகரை நோக்கி இருதரப்பும் படையெடுப்பு!
லிபியாவில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சிகர லிபிய இராணுவத்தின் தளபதி காலிஃபா ஹிப்தரின் படைகள் தலைநகர் திரிபோலி நோக்கி நகர்ந்துள்ளன.
குறித்த படைகளுக்கு எதிராக, இயந்திர துப்பாக்கிகள் அடங்கிய வாகனங்கள் சகிதம் இராணுவமும் தலைநகரை நோக்கி விரைந்துள்ளது.
லிபிய அதிபர் மும்மர் கடாஃபி கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிக்கின்றது. இந்நிலையில், அரச எதிர்ப்பு படையினர் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அங்கு அமைதியை ஏற்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்ற போதும், போர் உக்கிரமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு தரப்பினரும் தலைநகரின் பல பகுதிகளில் நிலைகொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் தமது உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் தேவையை பூர்த்திசெய்ய சிக்கல்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
லிபியாவில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜீ7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.
லிபியாவின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடத்த ஐ.நா. தீர்மானித்துள்ளது. நாட்டில் நீடித்துள்ள உறுதியற்ற நிலைக்கு தீர்வாக தேர்தலுக்கு செல்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
அத்தோடு, எண்ணெய் ஏற்றுமதி, அகதிகள் பிரச்சினை, மனிதக்கடத்தல் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளது. இந்நிலையில், இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி மாநாட்டிற்கு வழிசமைக்க வேண்டுமென ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.