வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இலங்கை February 15, 2021 6:15 am GMT 0 Comments 1324 by : Yuganthini

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 17பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 5பேர் வவுனியா வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 12 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் 10பேர் பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
அவருடைய நெருங்கிய உறவினர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று மன்னார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.