நாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது.
வடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகளே காணப்படுகின்றன.
அன்றாடம் பயன்படுத்தும் பல ரயில் கடவைகள் பாதுகாப்பற்று காணப்படுவதால் நாள்தோறும் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.
ரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை மூன்று தடவைகள் ரயில்வே திணைக்களத்திற்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எனினும், இன்னும் அதற்கு உரிய பதில் கிடைக்காமல் உள்ளதென குறிப்பிட்டார்.
ரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் பளைக்கும் முறிகண்டிக்கும் இடையில் இதுவரை 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமன்றி அவ்வழியாக பயணிக்கும் பல வாகனங்களும் விபத்திற்குள்ளாகியுள்ளன. அண்மைய ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பான ரயில் கடவைகள் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என அன்றாடம் பயணிக்கும் இவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பான ரயில் கடவைகளை அமைப்பது மிகவும் முக்கியமானது. இப்பிரச்சினையின் பாரதூரம் அறிந்து மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.