வடக்கு மீனவர்கள் பிரச்சினை: இந்தியாவுடன் இம்மாத இறுதியில் பேச்சு!
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முகமாக எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியா இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்குரிய முன்னேற்பாடாக வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள் உடனான விசேட சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலமாக வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினால் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு அனைத்து மீனவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.